tamilnadu

img

ஆன்லைன் மூலம் மது விற்கத் தடை கோரி வழக்கு

சென்னை,மே 11- ஆன்லைன் மூலமும் மதுபானம் விற்க தடை கோரி சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கால் மக்கள்  அவதிப்படுவதைப் பற்றி கவலைப் படாமல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதனை எதிர்த்து  வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனைகளை விதித்து மது விற்க அனுமதித்து அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.மதுக் கடை திறப்புக்கு எதிராக தமிழகம் முழு வதும் போராட்டங்கள் நடைபெற்றன. 

ஆனால் நிபந்தனைகள் மீறப் பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்யக்கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு, தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலமும் மது விற்கத் தடை விதிக்கக் கோரி, மதுரை நுகர்வோர் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதிகள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அதன் முடிவைப் பொறுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை மே 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

;